அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையை பேசுவது யார்?

Tamil Posts

சமஸ்கிருதத்திற்கான போர் என்னும் எனது நூல் ஷெல்டன் போலாக்கின் எழுத்துக்களை மையமாகக்கொண்ட மேற்கத்திய இந்தியவியலாளர்களின் ஒருபிரிவினரின் கருத்துக்களைப்பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறது. கடும் உழைப்பாளி என்பதால் போலாக் என்ற ஆராய்ச்சியாளரிடம் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. ஆனால் சமஸ்கிருதப் பாரம்பரியத்தைப்பற்றிய அவரது ஆராய்ச்சி அணுகுமுறையை என்னால் ஏற்க இயலவில்லை. ஏனெனில் அவரது ஆராய்ச்சி அணுகுமுறையானது ஹிந்து சமயங்களைத் தமது வாழ்வில் அனுஷ்டிக்கின்ற, பின்பற்றுகின்ற மக்கள் மிக உயர்வாக மதித்துப்போற்றும் சில ஆழ்ந்தக்கருத்துக்களையும் அதன் ஆதாரக் கட்டமைப்பையும் தகர்க்க, வேரரறுக்க, அழித்துவிட முயல்வதாக இருக்கிறது. இந்த வலைப்பதிவில் போலாக்கின் கருத்துக்களில் ஒரு சில முக்கியமானவற்றை சுருக்கமாக சொல்ல முனைகிறேன். கட்டுரையைப் படிக்கின்ற அன்பர்கள் எனது நூலை முழுமையாக வாசித்து, போலக்கின் கருத்துக்களையும் அதற்கு எதிரான எனது வாதங்களை ஆழ்ந்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது அவா.

ஷெல்டன் போலாக்கின் சமஸ்கிருத ஆராய்ச்சி தோற்றுவித்திருக்கின்ற சிக்கல்களை எனது நூல் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சட்டகங்களின்(பார்வை) முரண்பாடாக, மோதலாக, போராட்டமாக காண்கிறது. முதலாவது அகத்தவர் பார்வை மற்றொன்று புறத்தவர் பார்வை. அகத்தவர் பார்வை என்பது வைதீக மரபின் உள்ளே அதன் வாழ்வியல் நெறியில் ஆழ்ந்த பற்றுறுதியும் நம்பிக்கையும் கொண்டு வாழ்பவர்களுடையது. புறத்தவர் பார்வை அல்லது அன்னியர்  நோக்கு என்பது வேதங்களை நிராகரிப்பவர்கள், புறக்கணிப்பவர்கள் மற்றும் ஒதுக்குவோர்களுடையது. இந்த அன்னிய அறிஞர்கள் சமூக அடக்குமுறை மற்றும் அரசியல் ஆதிக்கம் போன்ற மார்க்சிய, பின்நவீனத்துவ கோட்பாடுகளின் சட்டகங்களின் வாயிலாக, பூதக்கண்ணாடிகளின் மூலமாக சமஸ்கிருத நூல்களை, சாஸ்திரங்களை விமர்சிக்கின்றனர்.

ஷெல்டன் போலாக் மற்றும் பிற புறத்தவர்களுடைய கீழ்கண்ட கருத்துக்களையும் ஆராய்ச்சி அணுகுமுறையையும் வைதீக பாரம்பரியத்தின் உள்ளே வாழ்கின்ற அகத்தவன் என்ற முறையில்  நான் நிராகரிக்கிறேன்..

  • புனிதமானது-புனிதமற்றது என்ற நிரந்தரமான வேறுபாட்டை, பிளவுக்கருத்தாக்கத்தை சமஸ்கிருதப் பாரம்பரியத்தினை ஆராய்வதற்கான அடிப்படையாக கொள்ளும் அவரது ஆராய்ச்சிமுறையியல்.
  • மரபின ஒடுக்குதல், இன அடக்குமுறை, வர்கபேதம், ஆண்-பெண் பாலின பாரபட்சம் ஆகியவற்றை சமஸ்கிருதம் மற்றும் வேதத்தின் உள்ளீடாக புனைதல், இட்டுக்கட்டுதல்.
  • பாரத நாட்டின் வரலாறு, சிந்தனை ஆகியவற்றிலிருந்து அதன் மிகமுக்கியமான உந்துவிசையாக இயங்கும் வாய்மொழி மரபுகளை புறந்தள்ளுதல், ஒதுக்குதல், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல்.
  • காவிய, காப்பிய இலக்கிய நடையை அரசியலாக்கும் போக்கு.
  • நமது சாஸ்திரங்களின் நற்பயன்களை முழுமையாக நிராகரிக்கும் போக்கு.
  • சமஸ்கிருதத்தையும் இதர பாரதிய மொழிகளையும் வேறுவேறு, தனித்தனி என்று பிளவுபடுத்தும் நாடகீயப் போக்கு.
  • ஹிந்துசமயம் மற்றும் பௌத்தம் ஆகியவை வேறுவேறு என்று கூறி அவைகளுக்கிடையே பிளவுண்டாக்கும் முயற்சி.
  • இராமாயணத்தை சமூக அடக்குமுறை என்பதோடு அதை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிந்துக்களைத் தூண்டி ஒன்று திரட்டும் அரசியல் முயற்சி என்று பழிக்கும் போக்கு.

ஆன்மிகம்(பாரமார்த்திகம்) மற்றும் லௌகிகம்(வியவகாரிகம்) ஆகிய இரண்டும் வேறுவேறான, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற, எதிரான, முரணானத் தளங்கள் என்பது போலாக்கின் ஆராய்ச்சிமுறையின் அடிப்படையான அனுமானமாக,  நம்பிக்கையாக, ஆதார சுருதியாக விளங்குகிறது.

புலன் கடந்த அனுபூதியே வைதீக மரபின்  முக்கியப் பிரமாணமாக ஆதாரமாக உள்ளது. ஆனால் அந்த புலன் கடந்த ஆழ்ந்த அனுபவம் என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை, படிநிலை சமூகஅமைப்பை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்பதாக போலாக் காண்கிறார்.

பாரத  நாட்டின் வரலாற்றின் முக்கிய முன்நகர்வுகள் எல்லாவற்றையும், அது தனது பாரமார்த்திக, வைதீக அடிப்படைகளில் இருந்து   விலகிச்செல்லும் முயற்சியின் விளைவுகளாகவே அவர் காண்கிறார். சமஸ்கிருதத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வேதரிஷிகள் தர்க்கபூர்வமாக  உலகைப்புரிந்து கொள்ள முயலாமல் ஆன்மிகத்தில் ஒதுங்கி தனித்திருந்த காலமாக அவர் அவதானிக்கின்றார்.

“கடவுளரின் மொழியும், மனிதரின் உலகும்:  நவீனகாலத்துக்கு முற்பட்ட இந்தியாவில் சமஸ்கிருதம், பண்பாடு, அதிகாரம்” என்ற தனது மிகமுக்கியமான நூலில், போலாக் இந்தக்கருத்தினை வெளியிட்டிருக்கிறார். ஷெல்டன் போலாக்கை ஆழ்ந்து புரிந்து கொள்ள முயல்பவர்கள் இந்த நூலை அவசியம் வாசிக்கவேண்டும்.

பொருளற்ற சடங்குகளும் மறுமையைப்பற்றிய இறுகியமனப்பிடிப்பும்  கொண்டதாக பிராமண  மேட்டிமைத்தனத்தை காண்கிறார் போலாக். சமஸ்கிருதம் அத்தகைய பிராமண மேட்டிமையின் பிடியிலிருந்து விலகி அரசர்களின் ஆதரவை பெறுவதற்காக உலகியலுக்கு நகர்வதை ஒரு முக்கியமான வரலாற்று முன்னகர்வாக அவர் கருதுகிறார். அரசர்களின் அதிகாரத்திற்கான ஆயுதமாக உருமாற்றமடைந்த சமஸ்கிருத மொழி பிற்போக்குத்தனமானதாகவும், கேலிக்குறியதாகவும் மாறிவிடுகிறது என்கின்றார்  அவர். சமூக அநீதி, அரசியல் உள்குத்து, ஊழல்கள் ஆகிவற்றால் அரசுகள்  சீர்குலைவதால் அரசின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் கருவியாக, ஆயுதமாக விளங்கிய சமஸ்கிருதமும் பிற்போக்கானதாக் உருமாறுகிறது என்று போலாக் கருதுகிறார்.

அறிவியல் பூர்வமாக ஆய்ந்து பரிசோதிக்கமுடியாது என்றக் காரணத்தைக்கூறி பாரமார்த்திகம் என்னும் வாழ்வின் ஆன்மிக பரிமாணத்தை மிக எளிதாக புறந்தள்ளிவிடுகிறார் போலாக். வேதம் கூறும் ஆன்மிக சாதனங்கள் பயிற்சிகள் எதையும் பயன்படுத்திப் பார்த்ததாக அவர் கூறிக்கொள்வதில்லை. அவரது ஆராய்ச்சி நோக்கும் வைதீக அணுகுமுறையாக இல்லை. தன்னை மதச்சார்பற்ற ஆராய்ச்சியாளர் என்று கூறிக்கொள்ளுவதால் நம்முடைய மரபுக்கு புறத்தவராக அன்னியராகிறார். இதன் விளைவாக சமஸ்கிருத மொழி மற்றும் நூல்களை ஆராய்வதில் ஆன்மிக நோக்கு புறந்தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டு மதச்சார்பற்ற அன்னிய அணுகுமுறை முதன்மைப்படுத்தப்படுகிறது.

சமஸ்கிருத வரலாறு மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றைப்பற்றிய மரபார்ந்த அகத்தவர்களின் பார்வை ஆரம்ப முதலே போலாக்கால் புறக்கணித்து ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  ஷெல்டன் போலாக்கின் ஆன்மிகம், ஆன்மிகமல்லாதது (மதச்சார்புள்ளது மற்றும் மதச்சார்பற்றது) என்று பிளவு படுத்தி மதச்சார்புள்ளவற்றை ஒதுக்கித்தள்ளும் ஆராய்ச்சி அணுகுமுறையால், மரபில் ஊரித்திழைத்த அகத்தவர் பார்வை புறந்தள்ளப்படுகிறது. அவரது இந்த மதச்சார்பற்ற ஆராய்ச்சி அணுகுமுறையை உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றன. மேலும் இந்தியாவில் சமூகநீதியின் பெயரால் சமஸ்கிருதத்தை தாக்கி அழிக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இத்தகைய சமஸ்கிருத ஆராய்ச்சிகள் மாற்றப்பட்டுவிட்டன.

வெளிப்படையாகவே தனது  நூல்களில் இருந்து தனக்கு கிடைக்கும் அரசியல் விளைவுகளைப்பற்றியும் போலாக் சொல்லியிருக்கிறார். சமஸ்கிருதத்தை ஒரு இறந்துவிட்ட மொழி என்று கடந்தகாலத்திற்கு அதை பின்தள்ளி பிற்போக்கு சிந்தனைகளின் மூலமாகத் தோற்றுவாயாக அது இலங்குவதை காட்டுவது ஒன்றே இந்தியாவில் சமூக நீதியை ஏற்படுத்துவதற்கான வழியாக அவர் கருதுகிறார். போலாக்கின் இந்தக்கருத்து எனது இரண்டாவது மறுப்பிற்கு இட்டு செல்கிறது. சமஸ்கிருதத்தில் பெண்கள், சிறுபான்மையினர், போன்றவர்களை ஒடுக்கும் கருத்துக்கள் ஆதிகாலம்தொட்டே பதிந்திருப்பதால் அதனை புத்துயிர்க்கசெய்வதும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும்  பிற்போக்கான வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்தவே பயன்படும் என்ற போலாக்கின் கருத்தையும் மறுக்கின்றேன்.

போலாக் எழுதுகிறார்:

சமஸ்கிருதம் நவீன காலத்துக்கு முந்தைய இந்தியாவில் ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்கு முதன்மையாக பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகும். மேலும் நவீன இந்திய மக்களில் மிகபிற்போக்குத்தனமான வகுப்புவாதம் பேசும் பிரிவினரால் அது மீண்டும் கையகப்படுத்தப்பட்டு அதற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது”(சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 140).

சமூக ஒடுக்குதலுக்கு சமஸ்கிருதம் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது, அவர் சொல்கிறார்.

சமஸ்கிருதத்தில் பதிந்துள்ள மரபார்ந்த ஆதிக்கம் என்பது கடந்த காலவரலாறு மட்டுமல்ல என்பது உறுதியாகத்தெரிகிறது. பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, ஆதிக்கத்தினை  நிலை நிறுத்தும் சமூகப்பொருளாதார கட்டமைப்பினை வலுவிழக்க சட்டங்கள் பல இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சமஸ்கிருதத்தின் கடந்தகால வரலாறு ஆழ்ந்து புரிந்துகொள்ளப்படாததால், சரியாக விமர்சிக்கப்படாததால், மரபார்ந்த ஆதிக்கம் தனது பல்வேறு கோர வடிவங்களோடு இன்னமும் வலிமையாகவே இருக்கிறதுஇருபிறப்பாளர் வர்ணத்தவர்களின் முதலாளித்துவ சுரண்டல் மரபார்ந்த அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துகின்றது (சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 140).

ஆனால் அறிஞர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்று போலாக் புலம்புகிறார். எனவே இந்தியப்பாரம்பரியத்தில் பண்பாட்டில் காணப்படும்  ஆதிக்கம், அடக்குமுறையின் பல்வேறு வடிவங்களை தோண்டித்துருவி, தேடிக்கண்டறிந்து, பகுத்தாய்ந்து தனிமைப்படுத்தி, அவற்றைப்பற்றிய கோட்பாடுகளை உருவாக்குவதே இன்றைய இந்தியவியலின்  தலையாய நோக்கம் என்று அவர் கருதுகிறார். கடந்தகாலங்களில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதில் இருந்த சமூகக் கட்டுப்பாடுகளுக்கு நவீன விளக்கங்களைக்கொடுப்பது அவரது ஆய்வின் அடிப்படை நோக்கமாக அமைந்திருக்கிறது. சமஸ்கிருதத்தை கற்கும் வாய்ப்பு சமூகத்தின் உயர் படிநிலைகளில் இருந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு சமஸ்கிருதத்தின் மீதிருந்த ஏகபோக, முற்றுரிமை பௌத்தர்களால் அகற்றப்பட்டது என்றாலும் அது அரசியல் அதிகாரத்திற்கான கருவியாக, ஆயுதமாகத் தொடர்ந்தது என்கிறார் போலாக். பண்பாட்டை நிலை நிறுத்துவதற்கும் பண்பாட்டுக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இயைவை உருவாக்குவதற்கும் சமஸ்கிருதத்தை அரசர்கள் பயன்படுத்தினர். யார் எதற்காக சமஸ்கிருதத்தை கற்கவேண்டும் என்பதை அரசர்களே முடிவு செய்தனர் என்கிறார் அவர்.  இந்தக்கருத்தை இன்னும் சற்றே விரிவாக கீழ்கண்டவாறு அவர் சொல்கிறார்.

அனைவரும் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ள மொழியாக சமஸ்கிருதம் இருக்கவில்லை. மிகச்சிலரே அதனை பயன்படுத்த வல்லவர்களாகவும் இருந்தனர். சிலர் அதைப்பயன்படுத்தினர் சிலர் அதைப்பயன்படுத்தவில்லை என்பதல்ல, மாறாக சிலருக்கு மட்டுமே அதை பயன்படுத்தும் உரிமை இருந்தது, பெரும்பான்மையான மக்களுக்கு அதைப்பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது” (சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 140).  

போலாக் இந்த ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் கட்டுப்பாடுகளின் தோற்றுவாயே ஆரியரின் வேதவாழ்வியல் என்று கருதுகிறார்.

அவர் கூறுகிறார்:

“சமஸ்கிருதம் முதன்மையாக பயன்படுத்தப்படும் தளம், தம்மை ஆரியர் என்று அழைத்துக்கொண்ட அந்தமொழியைப் பேசுகின்ற சமூகத்தின் சடங்கு மற்றும் வழிபாடு முதலானவை என்பதால், அவற்றிலே பங்கேற்பதற்கான நெறிமுறைகள் தடைகளாக உருவாக்கப்பட்டன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை”(சமஸ்கிருதத்திற்கான போர் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 142).  

வேத இலக்கியத்தின் மீதான அவரது வெறுப்புணர்வு, காழ்ப்புணர்வு மற்றும்  மேற்கத்திய மொழிவரலாற்று ஆய்வுமுறையின் பயன்பாடு ஆகியவற்றின் விளைவாக அவரது ஆராய்ச்சிமுறை மற்றும் கருத்தியல், அரசியல் திட்டம் அமைந்திருக்கிறது. வாய்மொழி இலக்கிய மரபை வரலாற்றில் இருந்து ஒதுக்குகிற போக்குக்கு இந்த அணுகுமுறை இட்டுச்செல்கிறது. தற்காலத்தில் தோன்றி பெருகிவரும் சமூக அரசியல் விழிப்புணர்வை மரத்துப்போகச்செய்யும் கடந்தகாலத்தின் அடிமைப்படுத்தும் போக்காக வேத மந்திரங்களை உச்சரித்தல், சடங்குகளைப்பேணுதல், நெடிய, சிக்கலான நூல்களை மனப்பாடம் செய்தல் ஆகிய முறைகளை அவர் காண்கின்றார்.  மேலும் பௌத்தசமயம் வைதீக பாரம்பரியத்தினை மேம்படுத்தும் வகையில் அமைந்த தீவிரத்தலையீடு என்ற முடிவிற்கு அவரை இந்த நிலைப்பாடு இட்டுச்செல்கிறது. பிராமணர்களின்  சமஸ்கிருதத்தின் மீதான முற்றுரிமையின் இரும்புப்பிடியினை தகர்த்தும், காவியம் போன்ற புதிய பண்பாட்டுவடிவங்களை உருவாக்கியும் பௌத்தம் வைதீகப்பாரம்பரியத்தில் ஒரு தீவிரதலையீட்டினை மாற்றத்தினை முன்னெடுத்ததாகவும் அவர் கருதுகிறார்மொழி ஆராய்ச்சியின் அறிவார்ந்த பயன் காவியம் போன்ற இலக்கிய வடிவங்களுக்கும், மகத்தான பண்டைய சமஸ்கிருத இலக்கண நூல்களுக்கும்  புதியவிளக்கங்களை வழங்குவது என்பதாக அவரது பார்வை அமைந்திருக்கின்றது. ஏனெனில் இந்த இலக்கிய வடிவங்களும் சரி இலக்கண நூல்களூம் சரி அரசுகளின் அதிகாரத்துக்கும், கௌரவத்துக்கும், கீர்த்திக்கு எவ்வாறு முட்டுக்கொடுத்து  நிலைநிறுத்தின, அவற்றை பெருக்கின என்பதைப்பற்றி அறிய பயன்படுகின்றன. அதுமட்டுமின்றி மேலும் சமஸ்கிருதம் எவ்வாறு பெண்கள், சிறுபான்மையினர், வெளியார் ஆகியோரை அடக்கிவைக்கும் சமூகக்கருத்துக்களை  தொடர்ந்து பதிவுசெய்து  வந்திருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. இந்த நிலைப்பாட்டிலிருந்து போலாக் சமஸ்கிருதம் மேட்டுக்குடியினரின் மொழி என்றும் அது சாமானிய மக்கள் பேசிய மொழிகளுக்கு அடிப்படையிலேயே முற்றிலும் மாறுபட்டது முரண்பட்டது, எதிரானது என்ற முடிவினையும் அடைகிறார்

     பாரத நாட்டின் மகத்தான வீரகாவியங்களான இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களை மற்ற(வேறுபட்ட) மக்களை வன்முறையின் மூலம் ஒடுக்குவதை நியாயப்படுத்தும் இலக்கியங்களாக  போலாக் கட்டுரைக்கின்றார். சமஸ்கிருதத்தில் உள்ள சாஸ்திரங்களில் காணப்படும் அளப்பரிய, உள்ளார்ந்த ஞானத்தையும், காலந்தோறும் புதிய கருத்துக்களை சிந்தனைகளை உருவாக்குவதற்கு அதில் காணப்படும் சாத்தியக்கூறுகளையும் மதித்துப் போற்றுகின்றவர்களுக்கு   போலாக்கின் மேற்கத்தியப் பூதக்கண்ணாடிப் பார்வையில் கட்டமைக்கப்பட்டுள்ள சாஸ்திரங்களைப்பற்றிய பிம்பம் பெரும் அதிர்ச்சியை அளிக்கும் என்பது மிகையாகாது.

சாஸ்திரங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வைதீக நெறிமுறைகளும், பிரபஞ்சவியல் புரிதல்களும், ஆன்மிக ஞானமும் புதியனவற்றை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடுகின்றன என்று போலாக் கருதுகிறார்நவீனக்காலத்துக்கு முந்தையக் காலாவதியாகிப்போன சட்டகங்களுக்குள் அவை சிறைப்பட்டிருப்பதால், மறுமலர்ச்சிக்காலத்தில் மேற்குலகில் தோன்றியது போன்ற சுதந்திர சிந்தனைகளை உருவாக்க அவற்றினுள் வாய்ப்பில்லை என்றும் அவர் கருதுகிறார். மொழியியலைப்பற்றிய பிரபலமான சமஸ்கிருத சாஸ்திரங்களைப்பற்றி போலாக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.  .

எனினும் இந்திய நாகரிகம், நெறிமுறைகள் வழியாக மனித நடத்தையினை வழி நடத்துவதன் முக்கியத்துவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. வைதீக சடங்குகளின் கண்டிப்பான நெறிமுறைகளில் இருந்து உருவான வாழ்வியல் நோக்கினால் மனித நடத்தைக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சாஸ்திரங்கள் எனப்படும் விதி நூல்கள்  வைதீக விழாக்களில் சடங்குகளை  நடத்துவதற்கான கடுமையான, கண்டிப்பான விதிமுறைகள்  வகுத்திருக்கின்றன. பிராமணர்களும், லௌகிகவாழ்வும், ஒருவகையான சடங்குவயமாதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்திருக்கின்றன. அதன் வாயிலாக எல்லாவிதமான வாழ்வியல் நடைமுறைகளும் முக்கியமான நிகழ்வுகளும் எப்படி நிகழ்த்தப்படவேண்டும் என்று சாஸ்த்திர நூல்களில் விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே சாஸ்த்திரம் என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்படும் இலக்கணங்கள், ஒட்டுமொத்த இந்திய நாகரிகத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றாகவும், அதன் அறிவு வரலாற்றில் காணப்படும் சிக்கல்களிலும் ஒன்றாகவும் காட்சியளிக்கின்றன”.  

இதுபோன்ற போலாக்கின் கருத்துக்களின் உண்மையான பொருளை நாம் புரிந்துகொள்ளாமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன. ஏனென்றால் ஆரம்பத்தில் பாரத பாரம்பரியத்தைப் புகழ்வது போல அதன் மிக அழகானக்கூறு சாஸ்த்திரம் என்று அவர் சொல்கிறார். பின்னர் அதே மிக அழகிய நூல்கள் சிக்கல்களுக்கு காரணமான மூலமாகக் கட்டுரைக்கப்படுகின்றன. பாரத தேசத்தின், நவீனத்துக்குமுந்தைய, விமர்சனம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளுகிற, அறிவியலுக்குமுரணான, பயனற்ற எல்லா சிந்தனைகளுக்கும் மூலமாக தோற்றுவாயாக சாஸ்திரங்களை அவர் புனைந்துரைக்கின்றார்

ஷெல்டன் போலாக்  மேற்கத்திய மதச்சார்பற்ற வரலாற்று அனுபவத்தைப்பற்றிய ஒருவகைப் புரிதலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முனைவது தெளிவாகத் தெரிகிறது. இடைக்காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சர்ச்சும், கிறிஸ்தவ நம்பிக்கைகளும் மக்களை மழுங்கடித்து அடக்கி ஒடுக்கும் சக்திகளாக, அரசியல் ஆயுதங்களாக இருந்தன. மறுமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் புரட்சியினால் அந்த சக்திகளின் அடக்குமுறையிலிருந்து மக்கள் விடுதலைபெற்று சுதந்திர சிந்தனையைப்பெற்றனர் என்பது ஐரோப்பிய வரலாறுபற்றிய ஒரு முக்கியமான புரிதல் ஆகும். இதை உண்மை என்று நம்பும்  போலாக்குக்கு, தற்போது சமஸ்கிருதத்தை நடைமுறையில் புழங்கும் பேச்சு மொழியாக்க, அதன் மறுமலர்ச்சிக்காக செய்யப்படும் முயற்சிகளை எதிர்ப்பது மிக இயல்பானதாகவே அமைந்திருக்கின்றது. சமஸ்கிருதத்தின் இந்த மறுமலர்ச்சி காவிமயமாக்குதலின் ஒரு பகுதியாகவே அவருக்குத்தெரிகிறது. இந்தியர்களைப் புரியாத சிந்தனைப்போக்கிலே, அதன் கடந்த காலவரலாற்றிலே அடைத்துவைக்கும் முயற்சியின் ஒரு அரசியல் ஆயுதமாகவும் சமஸ்கிருதமறுமலர்ச்சிக்கான முயற்சிகள் அவருக்குக் காட்சியளிக்கின்றன.

மேற்கண்டவற்றை ஷெல்டன் போலாக் என்ற அமெரிக்க இந்தியவியாலாளரின் முக்கியமானக் கருத்தியல் நிலைப்பாடுகள் என்று  நான் கருதுகிறேன். மிகச்சுருக்கமாக அவற்றை மேலே சொல்லியிருக்கின்றேன். நான் இவற்றையெல்லாம் விரிவாக சமஸ்கிருதத்திற்கானப்போர் என்ற எனது நூலிலே விவரித்திருப்பதோடு, அவற்றை நிராகரிக்கவும் செய்திருக்கின்றேன்.

நிறைவாக நான் சொல்வது என்னவென்றால் ஷெல்டன் போலாக்கின் சமஸ்கிருதம் பற்றிய பல்வேறு கருத்துக்ககளை நாம் எளிதாக மறுக்கவோ, நிராகரிக்கவோ அல்லது அபத்தம் என்று புறந்தள்ளிவிடுவது சாத்தியமன்று. அவர் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை படைத்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மொழியின் நெடியவரலாற்றையும், அதில் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய மகத்தான இலக்கியங்களைப்பற்றிய புரிந்துணர்வையும் கொண்டவராக  இருக்கிறார். நமது பாரம்பரியத்தைப்பற்றிய அவரது தவறான புரிதலுக்கு எதிராக நின்று நமது பாரம்பரியத்தின் மேன்மையை நிலை நாட்ட விரும்புகின்றவர்கள்,  ஆழ்ந்த மொழிப்புலமை, தர்க்கப்பூர்வமாக விவாதிக்கும் திறன் ஆகியவற்றோடு பாரத நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தில் ஆழ்ந்த அக்கரையும் உடையவர்களாக இருத்தல் வேண்டும், ஆனால் அதற்காக அவர்கள் மேற்கத்திய சட்டகங்களையோ, அதன் மதச்சார்பற்ற கோட்பாடுகளையோ பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய உயர்கல்வி நிறுவனங்கள் விதித்துள்ள நியதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் கூட அவர்களுக்கு கிடையாது.  நமது பாரம்பரியத்தினை, பண்பாட்டினை, நாகரிகத்தினைக் காப்பதற்கு, அவர்களுக்கு போதிய வசதிகளும் வாய்ப்புகளும் உள்நாட்டிலேயே இருக்கின்றன. வைதீகப்பாரம்பரியத்தில் வியவஹாரிகம்(லௌகிகம்) மற்றும் பாரமார்த்திகம்(ஆன்மிகம்) சார்ந்த அறிவுக்கருவூலங்கள் பலப்பல நிறைந்திருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றில் உள்ள உண்மைகளை உணர்வதற்கும் ஒருவர் தனது வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தகைய ஆழ்ந்த புரிதல் உடையவர்களால்தான் மிக வலுவான ஆதாரங்களோடு மிகச்சிறப்பாக ஷெல்டன் போலாக்கை முழுமையாக நிராகரிக்கமுடியும்.

Insiders versus Outsiders

Featured Image Credit : – The Hindu Newspaper (Online).

Leave a Reply